sekarkavithai

Archive for the ‘எனது பக்கங்கள்’ Category

பட்டமரம்
பட்டமரம்

அழகான கானகத்தே
கரையில்லா அழகினூடே
அசிங்கமாய் காட்சியளிக்கிறேன்.
இன்பரசம் குடித்துக்கொண்டு
வாழ்க்கையை கரைத்தவன் – வெறும்
சக்கையாய் நிற்கிறேன்.

வைகறையும் வரும்
காலைஒளி கதவைத்தட்டும்
தத்தம் பறவைகள்
தன்குஞ்சுகளை என்பாதுகாப்பில் விட்டு
இரை தேடச்செல்லும்.
குஞ்சுகளோ என்மீது
ஆடிப்பாடி விளையாடும்.
அவைதம் பிஞ்சு நகங்களால்
என் கிளைகளை
பற்று ஆனந்தம்
வார்தையின் பார்பட்டது.

அதற்கு பலனாய்
இளவேனிற் காய்காத்து
கோடையில் பழுத்து
இலையுதிற் காலத்தே
விருந்து படைப்பேன்.
அவைகளும் விருந்துண்டு
என் தோல்மேலே
ஓடி விளையாடும்.

உச்சிவந்தால்
ஓடிவருவர் –  என் மடிதேடி.
வந்தவர்க்கு பழம்கொடுத்து
படுக்க மடிகொடுப்பேன்.
மாலை வந்தால்
சிறுவர் கூட்டம்
துள்ளி வந்து
என்னை தொத்தி
என்மேல் ஊர்ந்து
என்னை அணைத்து
ஆனந்தமாக விளையாடுவர்.

இரவு வந்தால்
இருட்டு அரக்கனிடமிருந்து
என் பிள்ளைகளை காப்பேன்.
அந்த நிலவின் ஒளி
ஆற்றில் எதிரொளிக்கும்.
அதன்  வெளிச்சத்தில்
பசியுண்ட குஞ்சுகளுக்கு
தாயினம் உணவூட்டும்
தாய்மையை பார்த்து ரசிப்பேன்.

அணுஅணுவாய் துளி சாறுகூட
மிச்சமில்லாமல் வாழ்க்கையை ரசித்தேன்!
இன்றோ ஒருதுளி
இலைகூட இல்லாமல்
பட்டமரமாய் எஞ்சியிருக்கிறேன்!
யாரும் என்மீது
கூடிகட்டுவதில்லை!
யாரும் என்மீது
ஏறி விளையாடுவதில்லை!
நான் என்ன
பாவம் செய்தேன்?
எதுவும் எதிர்பார்க்காமல் வாழ்த்தவன்!
யாருக்கும் பயன்படாமல்
சக்கையாய் நிற்கிறேன்!
காய்ந்த சருகாய்
காயத்துடன் நிற்கிறேன்.

விடைகொடு எங்கள் நாடே!
விடைகொடு எங்கள் நாடே!

சகோதர சகோதரிகளே
நேரம் நெருங்கிவிட்டது.
நம் தொப்புள் கொடிகளை
மறந்து தொடர்பறுக்கும்
நேரம் நெருங்கிவிட்டது.
இந்தியர்களே உங்களுக்கு
எங்களை பற்றி கவலைபட நேரமில்லை.
இந்தியன் இந்தியனென
கத்தி கத்தி வாய்வலித்துவிட்டது.
இந்திய நாட்டில் இருந்து
நாங்கள் பிரிந்து விடுவோமென
தெரிந்துதான் தமிழ்நாடென
பெயர் சூட்டிவிட்டார்கள் போலும்.
எங்கள் வலியை புரிந்து கொள்ளாத
இந்தியர்களிடம் என்ன உறவுவென?
என் உள்மனதின் கேள்விக்கு
உங்களிடம் பதில் இல்லை.
பக்கத்து மாநிலக்காரனோ
தண்ணீர் தர மறுக்கிறான்.
பக்கத்து நாட்டுகாரனோ
என் உறவுகளை கொன்று குவிக்கிறான்.
உங்கள் சாக்கடை அரசியலோ
மின்சாரம் தர கூட மறுக்கிறது.

இந்தியா என்னும் மாயை
உண்மையில் எங்கள் இரத்ததை
குடித்துக் கொண்டிருக்கிறது.
என் தாய்மார்களை காக்காத
இந்த தாய்மண்
எங்களுக்கு தேவையில்லை.
தாகத்திற்கு தண்ணீர் தரா
ஒரு சகோதரத்தும் தேவையா?
சகோதரனின் வலியை உணரா
ஒரு சகோதரத்தும் தேவையா?
இந்திய சகோதரா ?
உன் வலியை என்னால் உணரமுடியவில்லை !
என் வலியை உன்னால்  உணரமுடியவில்லை !
பிறகென்ன சகோதரத்துவம்
பிறகென்ன ஒற்றுமை
விட்டு விடுங்கள் எங்களை
கனத்த இதயத்துடன்
பிரிந்து விடுகிறோம்.
நாங்கள் இந்தியனாக
வாழ விரும்பவில்லை.
ஒரு நல்ல மனிதனாக
வாழ விரும்புகிறோம்.
ஒரு  நாடு வாழ
ஒரு ஊரை பழிகொடுக்கலாம்தான்
அதற்காக எங்களை மட்டுமே
பழிகொடுத்துக் கொண்டிருக்கும்
உங்கள் இந்திய அரசியல்
எங்களுக்கு தேவையில்லை!

ஈழப்புலம்பல்

அடிவானத்தின் கீழ்
வெறித்த பார்வையோடு
கண்ணீர் துளியோடு காத்திருக்கிறேன்
அவர்களுக்காக.
அழகியலில் திளைத்து
வார்த்தைகளை வளைத்து
உணர்வில்லாமல்
கவிதை கிறுக்கி திரிந்தேன் .
ஒரு மனித மிருகத்தின்
ஈழப்புலம்பல்கோர தாண்டவம்
என் மனக்கண்ணாடியை
உடைத்தெறிந்து விட்டது.
அதோஅந்த வானத்தின் கீழ்
அந்த கடலை தாண்டி
வேலிகளின் நடுவே
என் மக்கள் இருக்கின்றனர்.
இல்லம் துறந்து 
உண்ண உணவில்லாமல்
உடுக்க உடையில்லாமல்
உறுப்புகளை இழந்து
உற்றம் சுற்றம் இழந்து
நடைபிணமாக காத்திருக்கிறார்கள்
என் வருகைக்காக.
நானோ கையாளாகாதவனாய்
கண்ணீரோடு புலம்பிக்கொண்டிருக்கிறேன்.

அதோ அடிவானத்தின் கீழ்
இருள் கொடைவிரித்து வருகிறது.
வெளிச்சம் குறைந்து கொண்டே வருகிறது.
அவர்களின் எண்ணிக்கையும்
குறைந்து கொண்டே வருகிறது.
வலியும் வேதனையும்
என் மக்களை அரித்துக்கொண்டிருக்கிறது.
இருளும் ஒளியும்
என் மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.
அந்த ஓணாய்கள் வேலிகளுக்குள்
என் மக்களை கொன்று
ஜீரணித்துக் கொண்டிருக்கின்றன.
நானோ இருளின் பிடியில்
கண்ணீரோடு காத்துக்கொண்டிருக்கிறேன்
நல்ல விடியலுக்காக .

இரத்தவெறி பிடித்த
மனித மிருகத்திடம்
சிக்கியதொரு கூட்டம்
வீரர்களின் உறுப்புகள்
தெறித்து சிதறுகின்றன
பதுங்கு குழிகளெங்கும்
இரத்தஆறுகள் ஓடுகின்றன
எதிர்படும் உயிர்களெல்லாம்
மரணபயத்தில் அலறுகின்றன
அதோ அங்கே
உடல்கள் தரம் பிரிக்கப்பட்டு
தலைகள் கொய்யப்படுகின்றன
தேர்ந்தெடுக்கப்பட்ட பிணங்கள்
நிர்வாணமாகி காமப்பசிக்கு உணவாகின்றன
சுமையான சதைப்பிண்டங்கள்
குப்பையென வீசப்படுகின்றன
அதோ அங்கே
ஒருவன் உயிருடன் உள்ளான்
போகிற போக்கில் பொழுதுபோக்காக
கத்தியால் கழுத்து துண்டிக்கப்படுகிறது
தொடர்கிறது வேட்டை
விடிய விடிய இரத்தபலி
குவிகிறது சடலங்கள்
அழகான காட்சிகள்
நன்றாக வேடிக்கை பார்த்தோம்
இரவு உணவை முடித்துவிட்டு
நிம்மதியாக உறங்களாம்
அந்த வெறிபிடித்த மிருகமோ
புத்தனை பிரார்த்தனை செய்கிறது
தன் பாவங்களை போக்க!
நாமோ மெளனமாக வேடிக்கை பார்க்கிறோம்
மெளனம் கலைவீரோ தோழர்களே!!

வணக்கம் நண்பர்களே

பள்ளி நினைவுகள் பற்றி பதிவுலக நண்பர்கள் எழுத அழைத்திருந்தனர்.இதை நான் எழுத நினைத்த போது இது ஒரு சுயபுராணமாக இல்லாமல் ,ஓர் நல்ல பாடமாகவும் , ஒர் நல்ல இதயத்தை பற்றிய பதிவாக அமைய வேண்டுமென்ற எண்ணம் உருவானது.ஆகையால் இப்பதிவை என் தாவரவியல் ஆசிரியரான எழிலரசு அவர்களை பற்றி எழுதியுள்ளேன்.

அன்று ஒரு நாள் ஓர் ஆசிரியர் ஒரே நாளில் என்னை அடித்து இரண்டு பிரம்புகளை ஒடித்தார்.காரணம் ரொம்ப சாதாரணம்.நான் வீட்டுப்பாடம் எப்போதும் எழுதுவதில்லை.அன்று வாழ்வில் வெறுப்பின் உச்சியில் இருந்த ஞாபகம்.இது நடந்தது நான் எட்டாம்வகுப்பு படிக்கும் போது.அன்று மாலை வீட்டில் அம்மாவிடம் அடித்த காயத்தைக் காட்டிஅந்த ஆசிரியரை கொலை செய்யும் அளவுக்கு திட்டிக்கொண்டிருந்தேன்.அம்மாவோ ஆசிரியருக்கு சப்போட்டாக,பாருடா மாதா,பிதா,குரு தெய்வம் மரியாதையா பேசு என்றார்.நானும் கோபத்தில் சற்றும் யோசிக்காமல் சொன்னேன் ஆமாம் மாதா,பிதா,குரு தெய்வம் ஆனால் மாதா,பிதா,ஆசிரியர்,தெய்வம் என்று யாரும் சொல்லவில்லையே.குருவைதான் திட்டக்கூடாது ஆனால் ஆசிரியரை திட்டலாம் என சொன்னேன்.இத்தனைக்கும் நான் மோசமாக படிக்கும் ஆள் இல்லை.ஏன் இவர்களுக்கு இந்த கொலைவெறி என யோசித்து யோசித்து ஆசிரியர்களை பார்தால் எனக்கு பற்றிக்கொண்டு வரும்.ஆசிரியர்களை நான் மதித்தது கிடையாது.என்னை பொறுத்தவரை குரு என்பவர் தட்சனை வாங்குவார் ஆனால் எதையும் எதிர்னோக்காமல் வாழ்க்கையை பார்க்க சொல்லி தருவார்.ஆனால் இந்த ஆசிரியர்களோ மாதா மாதாம் பணம் வாங்கிக்கொண்டு தங்கள் வெறியை பிள்ளைகளின் மேல் காட்டுகிறார்கள்.இவர்களை குரு என்று சொன்னால் குரு என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போகும்.இப்படியே என் பள்ளி வாழ்க்கை ஒரு போராட்டமாக கடந்து கொண்டிருந்தது.ஆனால் நானும் என் பள்ளியின் முடிவில் உண்மையான குருவை தரிசித்தேன்.

அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டியாக வந்து அறிவுக்கண்ணை திறந்தார்.எழிலரசு அவர்களோ வீல் சேரில் வந்து எங்கள் அறிவுக்கண்ணை திறந்தார்.சிவகாசி இந்து நாடர் உயர் நிலை பள்ளியில்(S.H.N.V. Higher Secondary school) எழிலரசு அவர்கள் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.ஒர் விபத்தில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுத்து அவரது தண்டிவடத்தில் பலத்த அடி.பல மாத போராட்டத்துக்கு பின் மீண்டும் பள்ளிக்கு வந்தார்.அதுவும் வீல் சேரில் இடுப்புக்கீழ் எந்த பகுதியும் வேலை செய்யாமல். பார்த்தாலே கண்கலங்கி நீர்வடியும்.ஆனால் ஒரு முறை கூட எங்களிடம் எந்த உதவியும் கேட்டதில்லை.பாடமோ புத்தகத்தை பார்க்காமலே 145 ஆம் பக்கத்தில் மூன்றாவது வரியில் அச்சுப் பிழையை திருத்திக்கொள்ளுங்கள் என தெளிவான உச்சரிப்பு வரும்.புத்தகத்தை தலைகீழ் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்.நிலாவில் கால் வைத்தது முதல் பைசம் சட்டைவத்துக்கு சட்டை போட்டது வரை அக்கு வேர ஆணிவர பிரிச்சு மேய்வார்.மொத்த வகுப்பும் வச்ச கண் மாறாம பார்த்து ரசிக்கும்.அவர் அமைதியா இருங்கனு சொல்லி கேட்பது அரிது.அந்த பள்ளியில் அவருக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கும் இருந்து பார்த்ததில்லை.

அடிக்கடி எங்களிடம் அவர் சொல்லும் வாசகம் நூலகத்திற்கு சென்று புத்தகத்தின் தலைப்பையும்,உள்ளடக்கத்தையும் மட்டும் படி வாழ்வில் பெரிய ஆளாகிவிடலாம் என்பது. நானும் என் கல்லூரி நாட்களில் இதை முழுவதுமாக கடைபிடிக்க ஆரம்பித்தேன்.பல நூறு புத்தகத்தை கடந்த பின் தான் தெரிந்தது அவரின் சூழ்ச்சி.ஒரு முறை தொட ஆரம்பித்தால் நம்மோடு புத்தகம் ஒட்டிக்கொள்ளும் என்பது. நிறைய படி,பிடித்தை செய்,உன்னால் முடிந்ததை மற்றவருக்கு கொடு. இது அவர் எங்களுக்கு சொல்லி கொடுத்த பாடம்.தளர்ச்சியுறும் போது நான் தன்னம்பிக்கை கட்டுரை படிப்பதில்லை வீல்ச்சேரில் வலம்வரும் தன்னம்பிக்கையான அவரை நினைத்துக் கொள்வேன்.புத்துணர்வும் புது வேகமும் எனக்குள் பிறக்கும்.உண்மையில் அவரே  எனக்கு உண்மையான குரு.

குப்பைக் குழந்தை
குப்பைக் குழந்தை

பச்சிளம் மேனிதன்னில்
பால் மணம் வீசுதடா – அதை
குப்பையில் எறிந்திட்ட – உன்
குப்பை மனம் தெரியுதடா
கணப்பொழுதில் தடுமாறி
நீ செய்த கோலங்கள்
குப்பையிலே கிடக்குதடா
செல்லறித்த மேனியாய்
பாலூறும் வாய்தனில்
எறும்பூறி கிடக்குதடா

 

ஏ பெண்ணே
ஏ பெண்ணே !

மடிதாங்கி பெற்றாய்
அம்மா என்றேன்,
எனக்கு முன்னே பிறந்தாய்
அக்கா என்றேன்,
எனக்கு பின்னே பிறந்தாய்
தங்கை என்றேன்,
தலைகோதி நடந்தாய்
தோழி என்றேன்,
தனிமையை போக்க
கைபிடித்து வந்தாய்
மனைவி என்றேன்,
பிறந்தது முதல் கடைசி வரை
என்னோடு இருக்கிறாய்
உனக்கு உலகையே
தரலாமென நினைத்தேன் – நீயோ
சிரித்தமுகம்
அன்பான வார்த்தை
இதமான அரவணைப்பு
கனிவான பேச்சு
என தெரியாததை கேட்கிறாய்.
கொஞ்சம் பொறு
நானும் கற்றுக்கொள்கிறேன்
இந்த மிருகத்தோளை கிழித்துவிட்டு
நுண்ணுணர்வுகளின் பிரபஞ்சத்திற்குள்
கைவீசி நடக்கலாம்
முன்னே சென்று விடாதே
அக்காவாகி விடுவாய்
பின்னே சென்று விடாதே
தங்கையாகி விடுவாய்
என்னோடு சேர்ந்து வா
இன்பம் தரும் தோழனாகவும்
துன்பம் போக்கும் கணவனாகவும்
கைகோர்த்து வருகிறேன்.

கருவறையின் கதறல்
கருவறையின் கதறல்

உன்னை என்னில்
விதையென விதைத்தேன்
அதை கருவறைக்கூட்டில்
பொன்னெனக் காத்தேன்
என்னைக் கொடுத்து
உயிர்துளி பிரித்து – அதில்
அன்பின் ரசமும் அமுதமும் கலந்தூற்ற
மலரே நீயும் மலர்ந்தாய்
அமுதவாய் மொழிந்தாய்
காலமும் கடக்க
மோகமும் பிடிக்க
முட்களும் வளர்ந்து
இருதயத்தைக் கிழிக்க
யாரிடமும் சொல்லாமல்
வேரை நீ அறுக்க
ஆழமாய் வளர்ந்தவள்
அடியில்லாமல் சாகிறேன்
காலத்தைக் கடந்தவள்
கணப்பொழுதில் காய்கிறேன்.

யாரோ யார் யாரோ
யாரோ யார் யாரோ

யாரோ யார் யாரோ ?
இந்த வாழ்க்கையின் வழித்துணை
யாரோ யார் யாரோ ?

வார்த்தையில் கனவுகள்
வடிக்கும் வேலையில்
தடைகள் சொன்னது
யார் யாரோ ?

சோதனை வாசலை
அடைத்த வேலையில்
கதவை திறந்தது
யார் யாரோ ?

துடிக்கும் இதயங்கள்
துவண்டிட்ட வேலையில்
ஆறுதல் தந்தவர்
யார் யாரோ ?

கண்ணீர் துடைக்க
கவிதை தந்து
கவலை துடைப்பவர்
யார் யாரோ ?

இரவின் நிலவில்
குளிரைத் துடைத்து
வெப்பம் தருபவர்
யார் யாரோ ?

கூரையில்லா வீட்டினுள்ளே
தொலைந்த ஜீவன்களை
கரை சேர்த்தவர்
யார் யாரோ ?

 யாரோ யார் யாரோ ?
காகிதம் கொடுத்து கவிதையாய்
வந்து போவார் யாரோ?

உன்னைப் பார்க்கும் போது

புதுவகைக் கோணம்
புறக்கண்ணில் தோன்றும் !
நீ வரும் நேரம்
சலனங்கள் தோன்றும் !
நீ காற்றினில்
கலந்த சர்க்கரையே !
என் நாவினில் வந்து
இனிப்பதும் ஏன்? (  …. நீ காற்றினில் )
என் எண்ணங்களில்
பொன் வண்ணங்களாய்
உந்தன் நினைவுகள்
புதைந்து இனிக்கிறதே!

நீ வெள்ளை நிலவு
கொள்ளை அழகு
துடிக்கும் நட்சத்திரம்
நீ பார்த்தால் சிரித்தால்
அருகில் அமர்ந்தால் எந்தன்
உயிரும் கரைந்தோடும்
ஒரு மாலைவெயில் போல
ஒரு மாற்றம் தந்தாயே !
எந்தன் நேசப்புதர்களிலே
முட்பூவாய் மலர்ந்தாயே !
என் எண்ணங்களில்
பொன் வண்ணங்களாய்
உந்தன் நினைவுகள்
புதைந்து இனிக்கிறதே!


Top Rated

Blog Stats

  • 17,593 hits

அதிகளவு சொடுக்குகள்

  • எதுவுமில்லை

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 5 other subscribers